(Chronic Diseases – Theoretical Part)
சாமுவேல் ஆனிமான்
தமிழாக்கம் : மரு. கு. பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521
ஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்பீடு
மாமேதை ஹானெமனின் Chronic Diseases & Theoretical Part, 1828ல் வெளிவந்தது. இதன் தமிழாக்கத்தை ஆசிரியர் மரு.கு.பூங்காவனம் அவர்கள் நமக்களித்திருக்கிறார்கள்.
இந்நூலாசிரியர் இதற்கும் முன்னதாக ஏழு மருத்துவ நூல்களை வெளியிட்டிருப்பதுடன், இன்னும் மூன்று மருத்துவ நூல்களை வெளியிட அச்சில் இருப்பது அறிந்து பெருமைபடுகிறோம். இதிலிருந்து ஹோமியோபதிக்கான ஆசிரியரின் கடின உழைப்பு பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
ஆங்கில மொழி கடுநடையிலிருந்து, இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக, சொற்களில் சிக்கிக் கொள்ளாமல், மூலக்கருத்திலிருந்து விலகிப் போகாமல், மையப் புள்ளியை தெளிவாக விவரித்திருக்கிறார்.
ஹோமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு என்ற இந்நூலின் உதவியைக் கொண்டு மாமேதை ஹானெமனின் Chronic Diseases புத்தகத்தின் உட்கருத்தை, தமிழில் தெளிவாகத் தெரிந்து, புரிந்து, அல்லல்படும் மக்களின் நெடுநோய்களை நீக்கும் ஆற்றலை ஹோமியோபதி மருத்துவர்கள் அதிகரித்துக் கொள்ள இந்நூல் உதவுமென்று நம்புகிறோம்.
அ.அப்துல் அஜிஸ்
ஹோமியோ முரசு – நவம்பர் – 2012
நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : பொறிஞர் பா. திருநாவுக்கரசு
மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான் வழங்கிய மாபெரும் கொடைகளாக உள்ளவை மருந்தியல் நெறிமுறை (Organon)யும், நெடுநோய்க் கோட்பாடும் (Chronic Diseases) ஆகும். இவற்றில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றால் அன்றி ஓமியோபதி மருத்துவப் பயிற்சியில் வெற்றிபெற முடியாது. அந்நூல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் அந் நூற் செய்திகளை அப்படியே பின்பற்றுபவர்களும் ஆற்றுகின்ற மருத்துவ அருஞ்செயல்கள் வியப்பு ஊட்டுபவையாய் உள்ளன.
மரு. கு. பூங்காவனம்
என்னை நானே இயன்றவரை மேம்படுத்திக் கொள்வதும், என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் இன்னும் நன்றாக ஆக்கிக் கொள்வதும் ஆகிய நோக்கத்துடன் நாம் இம் மண்ணுலகில் தோன்றியுள்ளேன் என்பதை அறியவில்லை என்றால் :-
- எனக்கு மட்டுமே உடைமையாக உள்ளதும்;
- அதையும் எனக்கு மட்டுமே உரிய கமுக்கமானதாக (secret) வைத்துக் கொண்டு அதனால் நான் பெரும்பயன் அடைவதற்கு வழிவகுப்பதாக உள்ளதும்;
ஆகிய ஒரு கலையை – நான் இறந்து போவதற்கு முன் இவ் உலக மக்களின் பொதுநன்மை கருதி – அக்கலையை வெளிப்படுத்தாமல் வைத்துக் கொள்வேன் ஆயின், இவ் உலகத்தைச் செம்மைப் படுத்துவதற்குச் சிறிதும் தெரியாதவனாகவே உள்ளேன் என்று என்னை நான் கருதிக் கொள்ள வேண்டியதாகும்.
– சாமுவேல் ஆனிமான் (1828)
புறத்தோலில் எழும்பித் தோன்றிய சொறியைத் தவறான மருத்துவத்தால் அடக்கியதாலும், அல்லது வேறு முறைகளால் அது தோலில் இருந்து மறைந்து விடுமாறு செய்வதாலும் – (அதைத்தவிர) பிறவகையில் நல்ல உடல்நலம் வாய்க்கப் பெற்ற அத்தகையவர்களிடம் அதே வகையான (தோல் எழும்புதல்) அல்லது அதற்கு ஒத்த அறிகுறிகளுடன் அது மீண்டும் தோன்றுவது உறுதிப்பட்டுள்ளது.
– மாமேதை ஆனிமான் (பக்கம் 26)
மிகப்பல நெடுநோய்களுக்கும் – மிகப் பேரளவான நிலையில், அடிப்படையாய் விளங்குவது இச் சொறி நோயே ஆகும். அந் நெடுநோய்களுள் ஒவ்வொன்றும் பிறவற்றுடன் தலையாய முறையில் வேறுபட்டுள்ளவை போல் காணப்பட்ட போதிலும், உண்மையில் அவை எப்படி வேறுபட்டவை அல்ல.
மாமேதை ஆனிமான் (பக்கம் 32)
நமக்குத் தெரிந்தவரை, சொறியனே மிகப்பழமை வாய்ந்த நோய்மூலச் சார்பு நெடுநோய் ஆகும். அது பறங்கிப்புண் நோயையும், வெட்டை மருநோயையும் போலவே மிக்க சலிப்பை உண்டாக்குவது; ஆகவே அதை முழுமையாய்க் குணப்படுத்தினாலன்றி, மிக நீண்ட வாழ்நாளைக் கொண்ட மாந்தர் தம் கடைசி மூச்சு வரை அதை அழிக்க முடியாது. கட்டுடல் வாய்ந்த உடல்வாகுவின் முழுமையான வலிமையினாலும் அச் சொறியனை அழித்துப் போக்கமுடியாது.
– மாமேதை ஆனிமான் (பக்கம் 34)