நமக்கு நாமே நலம் காண்போம்

namakku_book.PNGநமக்கு நாமே நலம் காண்போம் – மரு.கு.பூங்காவனம்;
பக்.136 ; ரூ.85;
தமிழ்மண் பதிப்பகம்;
சென்னை – 17;

 

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு பின்வறுமாறு

நமக்கு ஏற்படும் உடல், மன நோய்களை வாராமல் தடுக்கவும், வந்தபின் நலமாக்கவும் என்ன செய்ய வேண்டும என்பதைக் கூறும் நூல், யோகப் பயிற்சிகள், மனதை சமநிலை தவறாது பாதுகாப்பது உடலுக்குத் தேவையான பொருத்தமான உணவு போன்றவற்றால் நோய்களைத் தவிர்க்க முடியும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள விரிவான நூல். உடல், மனநலம் பேணுவது தொடர்பாக திருவள்ளுவர் கூறிய கருத்துகளையும் நூல் தொகுத்துக் கொடுத்துள்ளது. உடல் நலனில் அக்கறையுள்ள அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

தினமணி – திங்கள்கிழமை, 31 மே, 2010

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திரு. பு.மு. இராசராசன்

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

ஒவ்வொர் உயிரின் நன்மை தீமைகள் அவ்வுயிர் இடமளிக்காமல் மற்றவர் செய்து விடமுடியாது. இப்புத்தகத்தில் நமது நலனை நாமே போற்றி பாதுகாத்துக் கொள்வதுடன் உயர் ஆதனின் (Higer Self) தொடர்புடன் நாம் நமது வாழ்வின் உச்சத்திற்கு செல்வது எப்படி என்றும் மரு. பூங்காவனம் ஐயா அழகுற எடுத்து இயம்பியுள்ளார். ஆளுமை (Personality) ஆடாத மனம் அடங்கி உயர் ஆதனுடன் இயைந்து நடப்பின் பிணி போம், துன்பம் போம், வல்வினை போம்.

இதை டேவிட் பாச் அழகாக கூறுவர்:

“நாம் நமது மெய்யான இயற்கை தன்மையில் இயைந்து இசைபட உள்ளவரையில் நம்மால் பிணியுற்று வாழ இயலாது” – டேவிட் பாச்.

உணவுக்கு முன்னும், பின்னும் ஏன்? உணவாகவே மருந்து கழிக்கின்ற இக் கணிணி காலத்தில் மருந்து நீக்கி, பிணி நீக்கி, நல் உடல் மற்றும் உள நலத்துடன் வாழ வழி கூறும் ‘நன்னூல்’ “நமக்கு நாமே நலம் காண்போம்” என்ற இப் பொன்னூல் இஃது,

1. நடைமுறை ஓகம்
2. நமக்கு நாமே மருத்துவம்
3. மருந்தென வேண்டாவாம்

என்று மூன்று அங்கங்களாக பாங்குற பகுக்கப்பட்டு இன்புற்று வாழ வழி வகுக்கின்றது.

I. நடைமுறை ஓகம் (Yoga):

ஓகத்தில் கரை கண்டவரும் அல்லது நல்லாசிரியர் துணை கொண்டும்தான் ஓகம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற நிலைஇன்றி, எளியவரும், தமிழறிவு உடையவரும் தினமும் சிறிது நேரம் இன்னுடல் ஓம்புதல் வேண்டி எளிய முறையில் பயிற்சி செய்யும் வண்ணம் ஓக அடிப்படைகளும், மூச்சுப்பயிற்சியும், எளிய வகை நடைமுறையிலான ஒக உடல்பயிற்சிகளும் இனிதாக விளக்கப்பட்டுள்ளன. இஃது,

  • நடைமுறை ஓக முயற்சி
  • செய்ம்முறை விளக்கங்கள்
  • தமிழர் சொத்து

என்று மூன்றாய் விளக்குகின்றார்.

தமிழர் சொத்து என்ற பகுதியில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘ஓகநூல்’ எனும் மூலநூல் இருந்ததென்றும், கடல்கோள்களால் அழிந்து பட்டாலும் மக்களின் வழிவழித் தொடர்ச்சியான வாழ்வினால் ஓகமுறை பற்றிய நூல்கள் பின்னர் தோன்றியுள்ளன எனவும் இதைப் போல் தமிழருடைமையான பலவும திரிந்தும் சிதைந்தும், வழி மாறியும் போயின என்றும் இதனால் தமிழர் சொத்து, சொத்தையாய் போனது எனவும் விளக்கியுள்ளார்.

II. நமக்கு நாமே மருத்துவர்

இஃது ஓர் மெய்யியல் சார்ந்த பகுதி. நமது அறிவர் (சித்தர்) கூற்றான “உயிரார் அழிந்தால் உடம்பார் அழிவர், உடலார் அழிந்தால் உயிரார் அழிவர்” என்பதை தழுவி “நம்மை நாமே எங்ஙனம் நலமாய், உடலையும் மனத்தையும் நலமாய் பேணி வளர்ப்பது என மெய்யியலிலும், மருத்துவத்திலும் வளர்ந்து வெற்றிகண்ட மேதையான ‘எட்வர்டு பாச் (1886 – 1936) அவர்களின் வழியில் விளக்குகின்றார் ஆசிரியர். இதை ஆசிரியர் 82 வினா விடைகளாக எளியோர்க்கும் எளிதில் விளங்கும் வண்ணம் சிறுசிறு பகுதிகளாக பிரித்து விளக்கியுள்ளார்.

இங்கு ஒரு சிறிய பகுதியினை சுட்ட விரும்புகின்றேன். (வினா – 3) மூல நூலில் உன்னை நீயே குணப்படுத்துக (Heal Thyself) தலைப்பின்றி எட்டு பகுதிகளாக வற்புறுத்தி கூறப்பட்டுள்ளவை வருமாறு.

1. நோயும் மருத்துவமும்
2. ஐந்து அடிப்படை மெய்யியல் கூறுகள்
3. உண்மையான நோய்பற்றிய விளக்கம்
4. நோய்களை மருந்தன்றி போக்கும் வழிமுறைகள்
5. மாந்த உறவு நிலை பாதிப்புகள்
6. மருத்துவர் மருத்துவக் கலை பற்றிய கருத்துக்கள்
7. நடைமுறை கடைபிடிப்புக்கள்
8. நோய், துன்பம் ஆகிய இவற்றை வெற்றி காணும் வழிகள்
என்பவையாகும்.

மேலும் தொடக்கநிலை நோய்களாக பின்வரும் ஏழுவகை மனநிலைகளை குறிக்கின்றார் (வினா – 23)

1. செருக்கு
2. கொடுமை
3. வெறுப்பு
4. தன்விருப்பு

5. அறியாமை
6. நிலையின்மை
7. பேராசை

இவற்றுள் தன்விருப்பு (Self Love) நோய் மூலமாக குறிக்கப்பட்டு நடுநாயகமாய் வீற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

III. மருந்தென வேண்டாவாம்

இந்த பகுதியில் அனைத்து அறங்களையும் அறிவாகவும், செறிவாகவும், தௌ¤வாகவும், ‘அக்காலத்திற்கும், மிக மிக வளர்ந்ததாய் பறைசாற்றும் இக்காலத்திற்கும் மட்டும் இன்றி நாமறிய வருங்காலத்திற்கும் பொருந்தும் வகையில் 10 பாக்களாய் 133 அதிகாரங்களில் அறம், பொருள், இன்பம் என அனைத்தையும் ‘கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி குறுகத் தணித்த குறள்’ என புகழப்பட்ட குறட்பாக்களை படைத்த திருவள்ளுவப் பெருந்தகையின் இரத்தினங்களில் இருந்து ஆசிரியர் தெரிந்து கண்ட மருத்துவ கொள்கைகளாய் பின்கண்டவற்றை வரிசைபடுத்தி அவற்றை விளக்குகின்றார்.

1. பொதுமக்கள் நலவாழ்வு (பொது சுகாதாரம் – Public Health)
2. முற்காப்பும் நோய்தடுப்பும் (Prophylactic and Prevention)
3. நோயை முளையிற் கிள்ளுதல்
4. நோய் முதல் நாடுதல்
5. மனச்செம்மை மருத்துவம்
6. உடல் இயக்கம்
7. மருத்துவ நெறிமுறைகள்
8. வாழ்நாள் நீட்டிப்பு
9. பொருந்தும் உணவு
10. உணவு மருத்துவம் அல்லது மருந்தில்லா மருத்துவம்

இவைகளிலும் இறுதியில் கூறப்பட்டுள்ள பொருந்தும் உணவும், மருந்தில்லா மருத்துவமும் தனி சிறப்பு வாய்ந்தவையாகும்.

இணைப்பாக கலைசொற்பட்டியலும், ஓக நிலைகளின் விளக்க புகைப்படங்களும் உள்ளமை சுடர்விளக்கின் தூண்டுகோல் போல் அமைந்துள்ளது.

One thought on “நமக்கு நாமே நலம் காண்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The maximum upload file size: 32 MB.
You can upload: image, audio, video, document, spreadsheet, interactive, text, archive, code, other.