ஓமியோபதி – கொள்கை விளக்கக் கட்டுரைகள்
ஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்
பக்கங்கள் : 94
விலை : உரு.60
வெளியீடு : தாமரை பதிப்பகம், சென்னை. தொலைபேசி : 044-26258410
ஓமியோ முரசு இதழில் வெளி வந்த நூல் மதிப்புரை
ஓமியோபதி மருத்துவம் எவ்வளவு எளிமையானதோ, அந்த அளவிற்கு கடுமையானதும் ஆகும். அதாவது, இம்மருத்துவத்தின் தத்துவங்களை சரியாகப் புரிந்து கொண்டால் மிக எளிமையாகவே இருக்கும். இந்த தத்துவங்களை ஆங்கிலத்தில் படிக்கும் போது, அம்மொழியை நன்கு தெரிந்தவர்களே தடுமாறித்தான் போகிறார்கள்.
இதை நிவர்த்தி செய்யும் வகையில், ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் நூலை எழுதியிருக்கிறார் மரு.கு. பூங்காவனம். இவர் சிறந்த தமிழ்ப் பற்றாளர் என்கிற வகையில், ஆர்கனானில் கூறப்பட்டிருக்கும் தத்தவங்களை, மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், அழகான தமிழ் நடையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.
குறிப்பாக, பிற மொழி – ஆங்கில – கலப்பில்லாமல் இந்நூல் எழுதப் பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூல்.
ஆசிரியரின் வார்த்தைகளில் :
ஓமியோபதியர் ஒவ்வொருவரும் ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை என்னும் மாபெரும் கலைக்கூடத்திற்குள் சென்றும், ஆங்குள்ள அரும் பொருள்களைக் கண்டறிந்து வியந்தும் மகிழ்ந்தும் இன்புறுதல் வேண்டும். அதற்கான படிக்கட்டுகளாக அமைந்தவையே இதிற் காணப்படும் இருபத்து மூன்று குறுங்கட்டுரைகள்.
ஹோமியோ முரசு – ஜுலை – 2013
நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. விசயா கோவர்த்தனன்
எது இயற்கை மருத்துவம் ?
(Natural Laws and Homeopathy)
இயற்கை விதிகள் மாறாதவை, செயற்கை விதிகள் இடத்துக்கு இடம், காலத்துக்கு காலம் தேவைக்கேற்ப என மாற்றம்பெறுபவை. இக் கோட்பாட்டை ஆராயும் போது உலகில் உள்ள மருத்துவ முறைகளில் ஒன்று மட்டுமே இயற்கை மருத்துவம் என்று குறிக்கத்தக்கதாக உள்ளது. அது, ஓமியோபதி மருத்துவம் மட்டுமே யாகும்.
இயற்கை கற்பிக்கும் பாடம் :-
ஏற்கனவே உள்ள ஒரு நோயும், அதற்கு ஒத்ததாகவும் அதைவிட வலிமையானதாகவும் உள்ள ஒரு நோயும் ஆகிய ஒத்த நோய்கள் இரண்டும் ஒரே நேரத்தில் உடம்பியக்கத்தில் இணையும் போது அதன் விளைவு முற்றிலும் வேறாகக் காணப்படுகின்றது. அத்தகைய நிலையில் இயற்கையின் செயல் முறைகளால் நோய் குணமாக்கப்படும் நிலையை நாம் காண்கின்றோம். ஆதலால் மாந்தராகிய நாமும் (அவ் இயற்கை முறையைப் பின்பற்றி) எவ்வாறு குணப்படுத்த முனைதல் வேண்டும் என்றும் பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். (நெறி – 43)
நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வருவேன்
(Cause and Effect)
“சிங்கோனா” மருந்து கசப்புச் சுவையுடையதாய் இருப்பதால் அது மலை(மலேரியா)க் காய்ச்சலைப் போக்குகிறது என்று காரணம் ஆகாத ஒன்றை காரணமாகக் கூறியதை திருத்த முற்பட்டதன் விளைவே ஓமியோபதி தோற்றத்திற்கு மூலமாக அமைந்தது. எனவே, காரண காரியப் பெற்றோர்க்கு பிறந்த குழந்தையே ஓமியோபதி! அதன் ஒவ்வொரு உட்கூறும் காரண காரிய தொடர்புடையது. சான்றாக சில;
1. ஆவி வடிவு போன்ற (Spirit like) ஆற்றலைக் கொண்டது நோய்
– இது காரணம்
எனவே, ஆவி வடிவு போன்ற நிலையில உள்ள உயிராற்றலை அது
பற்றிப் பாதிக்கிறது – இது காரியம்
2. ஆவி வடிவுபோன்ற ஆற்றலைக் கொண்டது நோய் – மீண்டும் இது காரணம்
எனவே, அதற்கு ஒத்ததும், அதனினும் வலிமையானதும், ஆவி வடிவானதும் ஆகிய மருந்தே அந்நோயை முற்றாக அழித்து ஒழிக்கிறது – இது காரியம்
3. மருந்துப் பொருளில் நோயை உண்டாக்கும் ஆற்றல் உள்ளார்ந்து
கிடக்கிறது – இது காரணம்.
அதனால் அது, அதற்கு ஒத்துள்ள நோயைப் போக்குகிறது – இது
காரியம்
இவை தொடர்பான நெறிமுறைகள் – 9, 11, 16, 21, 22 ஆகியவை.
உயிராற்றல் பற்றிய உண்மை விளக்கம்
(The Vital Force)
ஓமியோபதியின் அடிப்படைக் கருத்துகளில் ஒன்றாகிய உயிராற்றல் பற்றி உண்மையானதும் அறிவுக்குப் பொருந்துவதும் ஆகிய விளக்கம் வேண்டப்படுகின்றது. இவ் விளக்கத்தை பின்கண்டவாறு நான்கு நிலைகளில் காணலாம். அவை:
முதல்நிலை விளக்கம் – உடம்பை இயக்கும் உயிராற்றல்
இரண்டாம் நிலை விளக்கம் – உயிராற்றலும் அண்டப் பேராற்றலும்
மூன்றாம் நிலை விளக்கம் – உயிராற்றலும் மன ஆற்றலும்
நான்காம் நிலை விளக்கம் – உயிராற்றலால் நோயைக் குணப்படுத்துதல்
இந்நூலில் பக்கம் 9, 10, 11, 12களில் விளக்கமளித்துள்ளார்.
அதோடு –
- உயிராற்றலின் பாதிப்பே நோய் (நெறி : 11) என்றும்
- உயிராற்றலின் மீட்சியே நலம் (நெறி : 12) என்றும்
- உயிராற்றலும் உடலும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தொடர்புடையவை (நெறி : 15) என்றும்
- உயிராற்றலின் எதிர்வினைச் செயலால் நோய் குணமாகிறது (நெறி : 62-67) என்றும்;
கூறியதோடு, உயிராற்றலின் பிற செயல்பாடுகளையும் மாமேதை ஆனிமான் ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.
வாய்ப்பேச்சை அறிவது போலவே நோய்ப் பேச்சையும் அறிய வேண்டும்
(Knowing the Symptoms)
வாயுள்ளவன் பேசக்கடவன் – என்பது அறியப்பட்டதே ஆயின், நோய்களும் பேசுகின்றன! என்கிறார் மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான். அந்நோய்ப் பேச்சு மொழியைக் குறி என்றும் அறிகுறி என்றும் அவர் கூறினார். பக்கம் 17, 18, 19, 20 இந்நூலில் விளக்கம் உள்ளது.
ஒரு கணினிப் பொறியாளர் கற்றுக் கொள்ளும் கணினி மொழிகளின் (Computer Language) அறிவுத்திறம் அவரை நன்னிலைக்கு உயர்த்துகிறது.
ஓமியோபதியர்கள் தங்களுடைய குணமாக்கற் கலை(Healing Art)யில் வல்லவர்களாய் விளங்குவதற்கு நோய்களின் மொழிகளை குறிகள், அறிகுறிகள் ஆகிய இவற்றின் இயல்புகளை நன்றாகப் புரிந்து கொள்ளும் வல்லமையுடையவர்களாய்த் திகழ வேண்டுமென்றோ?
ஒதுக்குப்புறம் (இடப்பாதிப்பு நோய்)
(Local disease)
நிறைய மச்சங்கள் இருப்பதால் நலமும் மிகுகின்றது, முதுமையடைவதும் தள்ளி போகின்றது என்னும் செய்தியாக ஓர் ஆங்கில நாளிதழில் வெளியானது. (“More moles means better health, delayed ageing” – The Times of India – dated : 24.11.2010)
ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை (Organon)யில் (நெறி 201) விளக்கம் கொடுத்துள்ளார்.
நீர் ஒட்டம் தடைப்படக் கூடாது என்பதற்காக, அங்கு அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் ஒதுக்கப்படுகின்றன – இயற்கையான செயல்பாடு.
அகப்பாதிப்பு நோய் துன்பம் பெருகாமல் இருக்குமாறும் இன்றியமையாத உடற்பகுதிகளுக்குக் காப்பு அளிக்குமாறும் அந்நோயின் ஒரு பகுதி புறப் பாதிப்பாக ஒதுக்கப் படுகிறது. இது உடலியக்கச் செயல்பாடு.
மச்சங்களாகி பெருகிய மடை மாற்றத்தால் நோய் பாதிப்பும் குறைகிறது. வாழ்நாளும் நீள்கிறது. – இது இலண்டன் மாநகர் அரசர் கல்லூரி ஆய்வுக் குழுவினரின் முடிவு, இவை அனைத்துக்கும் விளக்கமாய் அமைந்ததே இவ் ஓமியோபதி நெறிமொழி (Organon)
இத்தனை சிறிய உருண்டை போதுமா?
(Minimum Dose)
பொருத்தமான ஓமியோபதி மருந்துகள் குணமாக்கும் செயலை எவ்வாறு தூண்டுகின்றன என்பது புரிந்தவுடன் அத்தகைய ஐயம் தோன்றாது.
ஏனைய மருத்துவமுறை மருந்துகள் எல்லாம் உணவைப் போல உட் கொள்ளப்பட்டு செரிமானமாகும் நிலையில் தான் அவை செயல்படுகின்றன. ஆனால் ஓமியோபதி மருந்தோ, உணர்ச்சி நரம்பைத் தொட்டவுடனயே அதன் தூண்டுணர்வு தொடங்கி விடுகிறது என விளக்குகின்றார் மாமேதை ஆனிமான் என்று அதன் நெறிமுறைகளை 272, 284, 285, இந்நூலில் மருத்துவர் பூங்காவனம் ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.
பேச தெரிந்தால் போதாது, படிக்கத் தெரிந்தால் போதாது எழுதிக் காப்பதே இன்றியமையாதது.
(Case Record)
ஓமியோபதியில் நோய்க்குறிப்புகளை நுணுக்கமாகவும் விரிவாகவும் சரிநுட்ப (Accurate)மாகவும் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தும் சில நெறிமொழிகள் கூறப்பட்டுள்ளன. செயற்கை நோய்க் குறிப்பையும், இயற்கை நோய்க்குறிப்பை எழுதும் முறையும் நெறி எண்களை அனைத்தும் கொடுத்து விளக்கியதோடு நோய்க்குறிப்பில், மிக இன்றியமையாத ஒரு சிறு அறிகுறி விடுபட்டாலும் அங்கே நோய் குணமாவது தள்ளியும் தப்பியும் போய்விடும் என்பதால், அவ் அவலத்தைத் தவிர்பபதற்காகவே நோய்க் குறிப்பை எழுத வேண்டும். அதையும் மிகச் சரியாக எழுத வேண்டும் என்பதும் அவ்வாறு எழுதிக் கொள்வதால் உண்டாகும் அளவில்லாத நன்மைகளை வலியுறுத்துவதற்காகவும் இதுபற்றிய விரிவான நெறிமுறைகளை மாமேதை ஆனிமான் எடுத்துரைத்துள்ளார் என்றும் இக் கட்டுரையை பேராசிரியர் மற்றும் மருத்துவர் பூங்காவனம் ஐயா அவர்கள், ஒரு நல்ல மருத்துவம் தமிழ் மக்களுக்கு போய் சேர வேண்டும், பயன் அடைய வேண்டுமென்றும் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் அயராத உழைப்பும் பெரு முயற்சிக் கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார் அனைவரும் படித்து பயன்பெற்று நல் உள்ளம் கொண்ட மாமனிதரை வாழ்த்தி போற்றிடுவோமாக.